0124. ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல்
உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி
உன்பாதம் சரணடைந்தோம் அஷ்டலக்ஷ்மி
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலெக்ஷ்மி
கலையாவும் நிறைந்தவளே அஷ்டலக்ஷ்மி
நிலையான அருட்செல்வம் அருள்பவள் அவளே
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே (உலகெங்கும்)
ஸ்ரீ லக்ஷ்மி
பாற்கடலில் தேவர் அமுதம் கடையும் போது
பாரெல்லாம் வியந்திட நாரணி உதித்தாள்
நாரணனும் தேவியை மார்பினில் தாங்கி நின்றார்
பூரணியும் பூவுலகைக் காக்க வந்தாள்
அவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவி லக்ஷ்மி
1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி
இரு கண்கள் திருக்கரங்கள் கொண்டவள் அவளே
இகபரசுகம் யாவும் கொடுப்பவள் அவளே
அபயம் அளிப்பவளே ஆதிலக்ஷ்மி அவளே
ஆபரணம் அணிந்த ஒளிக்கதிர் ராணி அவளே
எழில் மலரத் தோரணங்கள் சூழ்பவள் அவளே
அழகிய தாமரைமேல் வாழ்பவள் அவளே
மஞ்சள் நிறஉடை தரித்து மலர்மாலை அணிந்தவளே
மங்களம் நிறைந்தவளே வல்லமை மிகுந்தவளே
ஆதிலக்ஷ்மி அன்னை ஆதிலக்ஷ்மி
2. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி
ஜடாமகுடம் அணிந்து காட்சி தந்தாள்
அன்னை இடுப்பினில் சுகுமாரனை ஏந்தி நின்றாள்
வீரம் மிகுந்த அபயக் கரங்கள் இரண்டிலே
பூரணக் கும்பமும் வைரக் கங்கணமும் விளங்க
அழகிய மாதரும் தீ பமும் தாங்கியே
எழில் வெண் சாமரம் வீசியிருக்க
முத்திழைத்த உரையோடு துலங்கும்
சக்தியோடு எழில் ராணியாக
சந்தானலக்ஷ்மி அவதரித்தாள்
அவள் சந்தான சௌபாக்கியம் தந்திடுவாள்
3. ஸ்ரீ கஜலக்ஷ்மி
பொன்னிறக் குடம் தாங்கி
வெண்ணிறயானை யிரண்டு
தன்னிரு துதிக் கையினால்
அபிஷேக நீர் கொண்டு
அன்னைக்கு நீராட்ட
அலங்கார தேவதையாய்
வெண்பட்டு புடவையுடன் காட்சி தந்தாள்
கரங்கள் நான்கும் உடையவளாம் கஜலக்ஷ்மி
திருக்கரத்தில் ஞானமுத்திரை உடையவளாம் கஜலக்ஷ்மி
இரவும் பகலும் துதிப்பவர்க்கே கஜலக்ஷ்மி
அரச போகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி
4. ஸ்ரீ தனலக்ஷ்மி
செல்வ திருமகளாம் மோகனவல்லி
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லி
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணிஸ்யாமாளை
வரத முத்திரை காட்டியே பொருள் செல்வம்
வழங்கிடும் அம்பிகை
மாமனோகர தேவி மார்பினில்
ஒற்றைவடப் பொன்னட்டிகை
சிரத்தினில் மணி மகுடமும்
தாங்கிடும் சிந்தாமணி - பல
வரங்கள் வழங்கிடும் ரமாமணி - அவள்
வரதராஜ சிகாமணி அவள்தான் தனலக்ஷ்மி
5. ஸ்ரீ தான்யலக்ஷ்மி
ஆற்றோரம் தன்னில் சுகாசனத்தில் அமர்ந்து
போற்று மன்பரைக் கண்டு மலர்ச்சியும் கொண்டுஎழில்
வாழை மரங்கள் மலர்தேன் பொழிந்து பூஜிக்க
ஆழ்கடல் அன்னையவள் காட்சி தந்தாள்
இடக்கை மேல்புறத்தில் செழுங்கரும்பை யேந்தி
இகத்தினில் நிலவளம் செழிக்க வந்தாள்
அவள்தான் தான்யலக்ஷ்மி! தான்யலக்ஷ்மி
6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி
சிங்கார முடிதனிலே அலங்காரக் கூந்தல்
செம்மேனியில் சிறந்த பொன்னாபரணங்கள்
அங்குச பாசமும் பல ஆயுதம் கையில் கொண்டு
செங்கோல் செலுத்தும் ராஜவடிவம் கொண்டாள்
அன்னையின் முகம் தன்னில் தவழ்ந்திடும்மந்தஹாசம்
அன்னைப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்து நிற்கும் அவளது தாய்ப்பாசம்
துன்பங்கள் நேராமல் காத்திடும் அவள் நேசம்
விஜயலக்ஷ்மி தேவி விஜயலக்ஷ்மி !
7. ஸ்ரீ மகாலக்ஷ்மி
நிறைந்திடும் அழகோடு வளரும் பொன்மேனியாள்
அறம், பொருள், வீடு, இன்பம் தரும்
நான்கு கரம் கொண்டாள்
அழகிய மலர் கொண்டு யானைகள் வணங்கி நிற்க
எழிலாக காட்சி தந்தாள் எங்கள் தாய்
சௌபாக்கியம் தரும் தெய்வம் தேவி லக்ஷ்மி
அபயக்கரம் நீட்டி அணைக்கும் மகாலக்ஷ்மி !
8. ஸ்ரீ வீரலக்ஷ்மி
ஒன்பது பனைமரங்கள் அடுத்து நிற்க தேவி
சிம்மாசனத்தின்மேல் அமர்ந்திருக்க
வெற்றி எட்டு கைகளிலும் சூலம்
கபாலம் கொண்டாள்
நற்கதியும் நமக்கருள நானிலத்தில் அவதரித்தாள்
பொற்பதம் பணிந்தவர்க்கு பொன்னாவரம் தந்து
வெற்றியுடன் வாழவைப்பாள் வீரலக்ஷ்மி
வரவேண்டும் வரவேண்டும் அஷ்டலக்ஷ்மி
அருளைத் தரவேண்டும் தரவேண்டும் ஆதிலக்ஷ்மி
சந்ததியைத் தந்திடுவாய் சந்தான லக்ஷ்மி
எண்ணும் பல யோகங்கள் தருவாயே கஜலக்ஷ்மி
தனம் பெருக மனமும் மகிழ காண்பாராய் தனலக்ஷ்மி
மனம் குளிர நிலம் செழிக்க நீயருள்வாய் தான்யலக்ஷ்மி
கலைகளில் வெற்றிதனைக் காண அருள் விஜயலக்ஷ்மி
சகல சௌபாக்கியம் தந்திடு மகாலக்ஷ்மி
உலகெங்கும் வீரத்தை நீயருள்வாய் வீரலக்ஷ்மி
உன்நாமம் சொல்பவர்க்கு அருள்புரிவாய் அஷ்டலக்ஷ்மி
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக