புதன், 9 ஜனவரி, 2019

0170. தொழிலில் இலாபம் அடைய

தொழிலில் இலாபம் அடைய அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்



அயோத்யா காண்டம்: சர்க்கம் 32


=======================================================================
உமா ஸம்ஹிதா
அர்தகாம: படேத் ஸர்கம் யாத்ரா தான கதாம்சகம்
ராமஸ்யாரண்ய கமன ஸமயே து த்ரிஸந்த்யகம் !!


தாம் எதிர்பார்த்த பணம் அல்லது பொருள் தனக்குக் கை கூடாமை, உத்தியோகத்தால் சம்பள உயர்வு ஏற்படாமை, கொடுக்கல் வாங்கல்களில் தகராறு முதலிய பணக்கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கும் பொதுவாக மேன்மேலும் பணம் விருத்தியாவதற்கும் ஸ்ரீ ராமன் காட்டிற்குப் போகுமுன் செய்த "யாத்ரா தானத்தை" விவரிக்கும் அயோத்யா காண்டம் 32-வது சர்க்கத்தை தினம் மூன்று காலங்களிலும் பாராயணம் செய்ய வேண்டும்.



நிவேதனம் : ஐந்து வாழைப்பழங்கள்.


ஸங்கல்பம்


ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரசாதன, அஸ்ம
து பாத்தேஷூ அர்த்த பரேஷூ கர்மஸூ
புஷ்கல தநாவாப்யர்த்தம் "யாத்ராதான"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே1

ஸ்ரீ வால்மீகி நம:
ஸ்ரீ ஹனுமான் நம:
ஸ்ரீ ராமன் நம:

ஸர்க்கம் 32
யாத்ராதானம்


தத: சாஸநமாஜ்ஞாய ப்ராது: ஸூபதரம் ப்ரியம் !
கத்வா ஸ ப்ரவிவேஷாஸூ ஸூயஜ்ஞஸ்ய நிவேஷனம் !!


ராமன் பிராம்மணர்களுக்குத் தானம் கொடுக்கிறார் என்ற புண்ணியகரமான வார்த்தையைக் கேட்டு லட்சுமணன், தன்னை அழைத்துப் போக ராமன் சம்மதித்ததைப் பற்றி அடங்காத ஆனந்தமடைந்தார். பிறகு அவருடைய உத்திரவுப்படி ஸூயக்ஞருடைய வீட்டிற்குப் போய் அக்னிஹோத்திர சாலையில் அவரைக்கண்டு நமஸ்காரம் செய்து," மித்திரரே! வாரும். உலகத்தில் ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்த என் தமையனுடைய வீட்டிற்கு வந்து பாரும்," என்று அழத்தார். ஸூயக்ஞர் காலையில் செய்ய வேண்டிய அக்னிஹோத்திரத்தை முடித்துவிட்டு சகல லக்ஷ்மியும் விளங்கும் ராமனுடைய அந்தப்புரத்திற்கு லட்சுமணனுடன் வேகமாகப் போனார்.


மஹா ஞானியான ஸூயக்ஞரைக் கண்டு ராமனும் சீதையும் பரபரப்புடன் எழுந்து கைகூப்பி, ஹோம அக்னியை உபசரிப்பது போல வலம் வந்து வணங்கினார்கள். உத்தமமான தங்கத் தோள் வளைகளையும், தங்கச் சரட்டில் சேர்க்கபட்ட நவரத்தினங்களையும், குண்டலங்களையும், கைவளைகளையும், புஜகீர்த்திகளையும் இன்னும் பல அபூர்வமான ரத்தினங்களையும் ராமன் ஸூயக்ஞருக்குக் கொடுத்து உபசரித்தார். பிறகு சீதை நினைவுபடுத்தியபின் "மித்திர!, இந்த ஹாரத்தையும் தங்கக் கொடியையும் ஒட்டியாணத்தையும் தங்களுடைய பாரியைக்கு சீதை கொடுக்க விரும்புகிறாள். அதை அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். மேலும், தான் வனத்திற்குப் போகும் சமயத்தில் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட இந்தக் கேயுரங்களையும் தோள் வளைகளையும் தங்களுடைய பத்தினிக்குக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறாள். பலவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு விலையுயர்ந்த விரிப்புடைய இந்தக் கட்டிலைத் தாங்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறாள். என் மாமா எனக்குக் கொடுத்த சத்ருஞ்ச்ஜயனென்ற யானையையும் இன்னும் ஆயிரம் யானைகளையும் தங்களுக்குக் கொடுக்கிறேன்," என்றார். ஸூயக்ஞர் யானைகளை பெற்றுக்கொண்டு ராம லட்சுமணனையும் சீதையையும் ஆசிர்வதித்தார்.


பிறகு பிரம்மா தேவராஜனைக் கட்டளை இடுவது போல் ராமன் மிகுந்தப் பிரியத்துடன், "லட்சுமண, அகஸ்த்தியருடைய புத்திரரையும் விவாமித்திரருடைய புத்திரரையும் இங்கே வருவித்து, லோகத்தில் பயிர்களை ஜலத்தால் போஷித்து வளர்ப்பது போல், அந்தப் பிராம்மண உத்தமர்களுக்கு ரத்தினங்களைக் கொடுத்துத் திருப்தி செய். அனேகமாயிரம் பசுக்களையும், தங்கம், வெள்ளி, நவரத்தினங்களையும் வேண்டியவரையில் கொடு.


"யஜூர்வேத தைத்ரீய சாகையை அத்யயனம் செய்பவர்களுக்கு ஆசாரியரான ஒரு பிராம்மணோத்தமர் ஒவ்வொரு நாளும் என் தாயின் வீட்டிற்கு வந்து, மிகுந்த பக்தியுடன் அவளுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மஹாவித்துவான். வேதங்களின் ரகசியங்களை அறிந்தவர். வாகனங்கள், பட்டுகள், போர்வைகள், வேலைக்காரர்கள் முதலியவைகளை வேண்டியவரையில் அவர்க்குக் கொடு. நமது வீட்டில் வெகுநாளாகப் பழகிக்கொண்டிருக்கும் நமது மந்திரியும் சாரதியுமான சித்ரரதரென்பவருக்கு எண்ணிறந்த ஆடுகளையும் ஆயிரம் மாடுகளையும் ரத்தினங்களையும் வஸ்த்திரங்களையும் தான்யங்களையும் கொடுத்துத் திருப்தி செய். வேதத்தில் கடம் காலாபமென்ற பாகங்களை அத்யயனம் செய்துகொண்டு பலாச தண்டத்தைத் தரிக்கும் பல பிரம்மசாரிகள் என்னால் ஆதரிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்பொழுதும் வேதாத்யனம் செய்து கொண்டிருப்பதால் ஆகாரம் தேட அவர்களுக்குப் பொழுதில்லை. இயற்கையாகவே சுறுசுறுப்பு இல்லாதவர்கள். ருசியான பதார்த்தங்களில் விருப்பமுள்ளவர்கள். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட எண்பது வாகனங்களையும், தான்யங்களைச் சுமக்க ஆயிரம் எருதுகளையும், நிலங்களை உழுவதற்கு இருநூறு மாடுகளையும், பால் தயிர் இவைகளுக்காக ஆயிரம் பசுக்களையும் அவர்களுக்குக் கொடு. மேகலையென்ற அரைநூல் மாலையைத் தரிக்கும் அனேக பிரம்மசாரிகள் தங்களுக்கு விவாகம் செய்யவேண்டுமென்று என் தாயை அண்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்களைக் கொடு. அதனால் கௌசல்யை திருப்தி அடையட்டும்," என்று கட்டளையிட்டார். ராமனால் குறிபிடப்பட்ட தனம் முதலியவைகளை அந்தப் பிராம்மணர்களுக்கு லட்சுமணன் குபேரனைப் போல தானே கொடுத்தார்.


பிறகு தாரைதாரையாகக் கண்ணீர்ப் பெருக்கிக்கொண்டு நிற்கும் பரிவாரங்களில் ஒவ்வொருவருக்கும் சௌக்கியாகப் பிழைப்பதற்குப் போதுமான தனத்தை ராமன் தானே கொடுத்து, " நாங்கள் திரும்பி வரும் வருவரையில் என் அரண்மனையையும் லட்சுமணனுடைய வீட்டையும் சூன்யமாக வைக்காமல் நீங்கள் அங்கிருந்து பாதுகாக்க வேண்டும்", என்றார். பிறகு தன் பொக்கிஷத் தலைவனைத் தருவித்தும், "என் ஐசுவரியம் முழுவதையும் இங்கே கொண்டு வா" என்று உத்தரவு செய்தார். அவைகளை, வேலைக்காரர்கள் குப்பல்களாகக் குவித்தார்கள். பிறகு ராமலட்சுமணர்கள் அவைகளைப் பிராம்மணச் சிறுவர்களுக்கும் கிழவர்களுக்கும் ஏழைகளுக்கும் போதுமான வரையில் கொடுத்தார்கள்.


அப்போது கர்க்கரிஷியின் வம்சத்தில் பிறந்த ஒரு ஏழை பிராம்மணன் அங்கே வந்தார். அவருக்குத் திரிஜடரென்று பெயர். ஏழ்மைத் தனத்தால் தேகம் முழுவதும் மஞ்சள் வர்ணம் படர்ந்திருந்தது. வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி ஜீவனம் செய்கிறவர். மிகவும் வயது சென்றவர். தன் மனைவி மக்களுடன் காட்டில் வசிப்பவர்.


இளம் பெண்ணான அவருடைய மனைவி, குழந்தைகளை அவருக்குக் காட்டி, "ஸ்வாமி, நாம் ஏழ்மைத்தனத்தை எவ்வளவு காலம் பொறுக்க முடியும்?. தங்கள் கையிலுள்ள கோடாலி, கலப்பை, மண்வெட்டி முதலியவற்றை எறிந்துவிட்டு நான் சொல்லுகிறபடி கேளுங்கள். தங்களுக்கு ஏதாவது திரவியம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் தர்மமே அவதாரம் எடுத்திருக்கும் ராமனைத் தரிசனம் செய்யுங்கள்", என்றாள். அவர் தன் பத்தினியின் வார்த்தையை ஒப்புக் கொண்டு தன் கந்தை வஸ்த்திரத்தை மறைத்துக் கொண்டு ராமனுடைய அந்தப்புரத்திற்குப் போகும் வழியால் அங்கே வந்து சேர்ந்தார். பிறகு அங்கிரஸ் முதலிய மஹரிஷிகளுக்கு சமமான தேஜசுள்ள அந்தப் பிராம்மணரை ஐந்தாவது கட்டுவரையில் ஒருவரும் தடுக்கவில்லை. அவர் ராமனுக்கு அருகில் போய், " ராஜபுத்திர! இந்த உலகம் முழுவதையும் உன் கீர்த்தி வியாபித்திருக்கிறது. நான் பெரிய குடும்பி. அவர்களை போஷிக்க என்னிடத்தில் வேண்டிய தனமில்லை. காட்டில் உதிர்ந்த நெல்லுகளைப் பொறுக்கி ஒவ்வொரு நாளும் ஜீவனம் செய்கிறேன். ஆகையால் என்னிடத்தில் கிருபை செய்யவேண்டும்" என்றார்.


இந்தப் பிராம்மணன் பெரிய குடும்பி, மஹாதரித்திரன். இவருக்குத் தனத்தில் எவ்வளவு ஆசை இருக்கிறதென்று பரீக்ஷிக்க விரும்பிப் புன்சிரிப்புடன் வேடிக்கையாக , "ஸ்வாமி!, எண்ணிறந்த என் பசுக்களில் ஒரு ஆயிரம் கூட இன்னும் தானம் கொடுக்கப்படவில்லையே. தங்கள் கையிலிருக்கும் கழியை சுழற்றி எறியுங்கள். அது எங்கே விழுகிறதோ அதுவரையில் இருக்கும் பசுக்கள் தங்களுடையத்" என்றார்.


உடனே அந்தப் பிராம்மணன் வெகு பரபரப்புடன் தன் வஸ்த்திரத்தை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, முழு பலத்துடன் கழியைச் சுழற்றி எறிந்தார். அது சரயு நதிக்கு அக்கரையில் அனேகமாயிரம் பசுக்களுக்கு நடுவில் விழுந்தது. அப்பொழுது ராமன் அந்தப் பிராம்மணரை மிகுந்தப் பிரியத்துடன் ஆலிங்கனம் செய்து, சரயு நதிக்கரையிலிருந்து அந்த மாட்டு மந்தைகள் யாவற்றையும் திரிஜடருடைய வீட்டிற்கு ஒட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இடையர்களுக்கு உத்தரவு செய்து, "ஸ்வாமி!, தாங்கள் என்னிடத்தில் கோபிக்காமலிருக்கப் பிரார்த்திக்கிறேன். தங்களுடைய ஒப்பற்ற பலத்தை அறிய விரும்பியே கழியைச் சுழற்றி எறியும்படி தங்களைச் சொன்னேன். வேடிக்கையாகச் செய்ததே தவிர வேறல்ல. இன்னும் ஏதாவது வேண்டியிருந்தால் கேட்கும்படி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு யாதொரு தடையும் வேண்டியதில்லை. பிராம்மணர்களுடைய உபயோகத்திற்காகவே என் ஐசுவரியம் முழுவதையும் சம்பாதித்து இருக்கிறேன். தங்களைப் போன்ற மஹான்களுக்கு அது உபயோகப்பட்டால் அது எனக்கு அளவற்ற கீர்த்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்", என்று அவரை சமாதானம் செய்தார். திரிஜடரும் அவருடைய மனைவியும் அந்த மாட்டு மந்தைகளைப் பெற்றுக் கொண்டு அளவற்ற ஆனந்தமடைந்து கீர்த்தி, பலம், பிரீதி, சுகம் முதலிய மங்களங்கள் குறைவில்லாமல் விருத்தியாக வேண்டுமென்று மனப்பூர்வமாக ராமனை ஆசீர்வதித்தார்கள்.


பிறகு ராமன் தன் பராக்கிரமத்தால் தர்மமாக சம்பாதிக்கப்பட்ட அளவற்ற ஐசுவரியத்தைத் தன் மித்திரர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தகுந்த உபசாரத்துடனும் மரியாதையுடனும் கொடுத்தார். அங்கிருந்த பிராம்மணர்களும், மித்திரர்களும், வேலைக்காரர்களும், தரித்திரர்களும், பிச்சைக்காரர்களும் ஆக எல்லோரும் தங்களுடைய யோக்கியதைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி ராமனால் கொடுக்கப்பட்ட தானத்தால் திருப்தி அடைந்தார்கள். திருப்தி அடையாதவர்கள் ஒருவரும் இல்லை.


த்விஜ; ஸூஹ்ருத் ப்ருத்யஜனோதவா ததா
தரித்ர பிக்ஷாசரணச்ச யோ பவேத் !
ந தத்ர கச்சிந் ந பபூவ தர்பிதோ
யதார்ஹ ஸம்மாநந தான ஸம்ப்ரமை: !!
ஸர்க்கம் 32
யாத்ரா தானம் நிறைவு பெற்றது.


மங்கள ஸ்லோகங்கள் கூறி நிறைவு செய்யவும்.

கருத்துகள் இல்லை: